எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

சுவை, மணம், பார்வை, கேட்டல், உணர்ச்சிகள் எல்லாமே நான் எனும் தன்னுணர்வால் (consciousness) ஏற்படும் குணாதிசயங்கள். இது மட்டும் இல்லாவிட்டால் அறிதல் அல்லது உணர்தல் என்பதே தோன்றி இருக்காது. இந்த அகநிலையின் (subjective) மேலே தான் அறிவியலின் அடித்தளமே அமைந்திருக்கிறது. இருந்தும் உயிரியலில் இதற்கான சரியான பதில் இல்லை. ஒருவேளை இயற்பியல் அல்லது நரம்பியல் துறை?

கேள்வியோடு ஆரம்பிக்கிறார் மெய்யியல் பேராசிரியர் பிலிப் கொஃப் (Philip Goff). அவரின் Galileo’s Error நூல், தன்னுணர்வை இன்னொரு கோணத்தில் பார்க்கிறது.

மெய்யியல் (philosophy) இன்றிருக்கும் இயற்பியல் கருத்துக்களை பல்வேறு கூறுகளாக வகைப்படுத்தி ஆய்வு செய்கிறது. அதில் இரண்டு முக்கிய பெரும் பிரிவுகளை ஆசிரியர் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்கிறார். கடைசியில் மூன்றாவதாக ஒன்று இருக்கிறது. என் கருத்தும் அது தான் என்கிறார்.

முதலில் ஒரு வரலாற்றுக் குறிப்பு : 17ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை மெய்யியல் ஞானி அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள் சரியானவை என்று எல்லாரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். கலிலியோ களத்துக்கு வந்தாலும் வந்தார். எல்லா விஷயங்களையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டார்.

1623 களில் வெளியிட்ட அவரின் புத்தகத்தில், அறிவியலுக்குக் கணிதம் மிகமிக அவசியம். அனைத்தையும் சோதனைக்களத்தில் அளவீடுகள் மூலம் உறுதி செய்த பின்பு மட்டுமே உண்மை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரே போடாய்ப் போட்டார்.

ஒரு பொருளின் அளவு, அதன் உருவம், அது இருக்கும் இடம், அதன் அசைவு என்று நாலு கருப்பொருள்களில் உலகின் அனைத்தையும் அடக்கிவிடலாம் என்று நிர்ணயம் செய்தார் அவர். (size, shape, location and motion)

அப்போ, வாசம், சுவை போன்ற அகநிலை உணர்வுகளை எங்கே அடக்குவது என்று அவரிடம் கேட்டபோது, அவை ஆன்மாவில் தங்கி இருக்கின்றன என்று ஒரே வரியில் பதில் சொன்னார். (கடவுள், ஆன்மா போன்ற விடயங்களில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர் இன்றைய இயற்பியலின் தந்தை என்று பேரெடுத்த கலிலியோ.)

இனி நூலாசிரியர் எடுத்துக் கொண்ட முதலாவது பிரிவு :

நான் பாட நீ ஆடு கண்ணே

இருபொருள்வாதம் அல்லது இருமை வாதம் (Dualism) எனும் சிந்தனைக்கூறு நாம் குழந்தைகளாய் இருக்கும்போதே நம் மூளைக்குள் திணிக்கப்பட்டு விடுகிறது. அதாவது நம் உடல் வேறு, மனம் வேறு என்று சொல்லிக் கொடுத்து விட்டால் பிறகு யோசிக்கவா போகிறோம்?

இந்த இருமை வாதப்படி, மனம் என்பதை உருவாக்குவதே தன்னுணர்வு தான். மூளை அல்ல. தன்னுணர்வு நம் உடலை இயக்குகிறது. கையை மேலே தூக்கு என்கிறது தன்னுணர்வு. தூக்குகிறோம். கீழே போடு. போடுகிறோம். அதெப்படி உருவமே இல்லாத தன்னுணர்வு பொருள்களை இயக்க முடிகிறது என்று கேட்டால் இருமை வாதம் கப்சிப் ஆகிவிடுகிறது.

இந்த சிந்தனையை நாம் இயற்பியலில் எங்கும் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, இயற்பியல் மேதை ஐசாக் நியூட்டன் பொருள்கள் அல்லது கோளங்களின் இடையில் இருக்கும் விசை பற்றி சொல்லிவிட்டு அதை எப்படி அளப்பது என்று கணித சமன்பாடு தந்தார். (இரண்டாம் விதி).

ஆனால் அதில் புவி ஈர்ப்பு விசை என்றால் என்ன என்று அவரால் சொல்லமுடியவில்லை. அவருக்குப் பின் வந்த மேதை ஐன்ஸ்டைன் வெளிநேரம் (spacetime) வளைவதால் புவி ஈர்ப்பு ஏற்படுகிறது என்றார். விசை அல்ல அது. புவி ஈர்ப்பு வீச்சு என்று திருத்தினார் அவர். சரி. புவி ஈர்ப்பு வீச்சு என்றால் என்ன? அவரும் சொல்லவில்லை.

வரலாற்றின் வழியே பார்த்தால் இருமை வாதம் கெட்டியாகவே இருந்திருக்கிறது. கடவுள், ஆன்மா, சொர்க்க லோகம், நரக லோகம், மறுபிறப்பு, கர்மவினை..,, இப்படி நம்பிக்கைகளை நாம் பட்டியல் போட்டால் இருமை வாதம் இவற்றில் இலகுவாகவே பொருந்திவிடும்.

இருந்தும் மேலே சொன்ன கேள்விகள் எக்குத்தப்பாக வந்து விழவே, தன்னுணர்வுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டது. எலெக்ட்ரான் அல்லது கோளங்கள் போல அதுவும் ஒரு அடிப்படையான இயற்கையின் அங்கம் என்று அதனுள் சேர்த்துக் கொண்டார்கள் இருமை வாத குழுவினர்.

பிரபஞ்சம் என்பது மனமும் பொருள்களும் சேர்ந்த ஓர் கலவை . அங்கே மனமும் (தன்னுணர்வும்) இயற்பியல் விதிகளும் சேர்ந்து இயங்குகின்றன என்று அவர்களின் புதிய விளக்கம் அமைந்தது. (psycho-physical laws). புதிய பேர்: இயற்கை இருமை வாதம். (Natural Dualism).

இந்தப் புதிய இயற்கை இருமை வாத குழுவுக்கு ஆதரவாக, நரம்பியல், இயற்பியல் துறைகள் சேர்ந்து புதிய விளக்கங்கள் தருகின்றன என்கிறார் பேராசிரியர்.

ஒருங்கிணைந்த தகவல் (Integrated Information Theory) கோட்பாடு இதில் முக்கிய செயலாற்றுகிறது. தகவல்களின் ஒருங்கிணைப்பு தான் தன்னுணர்வின் அடிப்படை என்பது இவர்கள் கருத்து. கணிதத்தின் துணை கொண்டு தன்னுணர்வை அளவீடு முறையில் கொண்டு வந்துவிட முடியும் என்கிறார்கள். (கலிலியோ அய்யாவின் நினைவு வருகிறதா?)

மூளையின் cerebrum பகுதியில் நியூரான்களின் இயக்கத்துக்கும் தன்னுணர்வின் செயல்பாட்டுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டுகிறது நரம்பியல் துறை. இருக்கலாம். ஒத்துக் கொள்கிறேன். இருந்தும் தொடர்பு ஏன் இருக்கிறது என்று நீங்கள் விளக்கவில்லையே? பேராசிரியர் விடாக்கண்டன் அவதாரம்.

ஆய்வுகளைத் தொடர்ந்து செய்யுங்கள். என் முடிவை ஒத்தி வைத்திருக்கிறேன் என்றும் பச்சைக் கொடி காட்டுகிறார் அவர். (பெருவாரி மெய்யியலாளர்கள், இயற்பியலாளர்கள் தன்னுணர்வோடு சேர்ந்தியங்கும் இயற்பியல் விதிகளா? இதென்ன புதுக்கதை என்று சந்தேகத்தோடு பார்க்கிறார்கள் என்று ஒரு தகவலையும் போகிற போக்கில் செருகி விட்டிருக்கிறார்.)

இறைவன் இருக்கின்றானா

இருமை வாதத்தினுள் இருக்கும் பரம்பொருள் சக்திதேவியோ? மத நம்பிக்கை உள்ளவர்கள் அவள் இல்லாமல் எதுவுமே அசைவதில்லை என்கிறார்கள்.

இயற்பியல் தெரிந்த சில பக்தர்களின் விளக்கம் இது : பேரண்ட வெடிப்பின் பின்னர் (Big Bang) நடப்பது நடக்கட்டும் என்று சக்தி தேவி அமைதியாக இருக்கிறாள்.

இது கொஞ்சம் ஓவர். இப்படி எடுத்துக் கொள்ளலாமா? அவள் பிரபஞ்ச நடப்புகளை நிச்சயம் கவனிக்கிறாள். வேண்டும்போது தலையிடுகிறாள். ஆனால் தன் இருப்பைக் காட்டிக் கொள்வதில்லை.

சக்திதேவி ஓர் உலகில் அற்புதங்கள் நிகழ்த்துகிறாள் என்று வைத்துக் கொள்வோம். தீராத நோய்களைத் தீர்த்து வைக்கிறாள். இருந்தும் மருத்துவர்களுக்கு ஏன் என்று புரிவதில்லை. அசாதாரணமான நிகழ்வுகள் என்று மட்டும் அவர்களால் குறிப்பு எழுதி வைக்க முடியும். எதுவுமே உறுதியாக சொல்ல முடியாத திரிசங்கு நிலை இது. மருத்துவர்கள் கண்களுக்கு அற்புதங்கள் தெரியவில்லையோ?

கடவுள் தன்னைக் காண்பித்துக் கொள்வதில்லை என்கிற நிலை இருமை வாதத்துக்கு சொல்லி வைத்தது போல் பொருந்துகிறது.

நான் கையைத் தூக்குவதும் பிறகு கீழே போடுவது கூட இறைவன் செயல். ஆகவே ஒவ்வோர் கணமும் அற்புதம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இருமை வாத ஆட்களிடம் கேட்டால் தன்னுணர்வு அப்படி செய்ய வைக்கிறது என்று சொல்வார்கள். அப்படி என்றால் ஒரு ஆவி அல்லது பேய் கூட இந்த செயல்பாட்டை பின்னாலிருந்து நடத்துகிறது என்று சொல்ல முடியுமே.

ஒரு முறை பார்த்தாலே போதும்

இருமை வாத கோட்பாட்டை விமர்சனம் செய்யப்போய் ஆண்டவனை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளிவிவிட்ட பிறகு குவாண்டம் கோட்பாட்டுக்குள் இறங்குகிறார் பேராசிரியர்.

அணுத் துகள்களின் நடப்புகளில் “பார்வை” பங்கு வகிக்கிறது என்று இன்றைய உயர்பள்ளி, பல்கலைக்கழக மாணவர்கள் அறிந்திருக்கிறார்கள். குவாண்டம் இயக்கவியலில் (Quantum Mechanics), பார்க்கும் பார்வை மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதால் இயற்பியலாளர்களுக்கு 1990 களில் இருந்து தன்னுணர்வு பற்றி இன்னும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பது நல்ல செய்தி.

குவாண்டம் இயக்கவியல் கணித சமன்பாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. எங்கே, எந்த இடத்தில் தந்திரங்கள் செய்தால் எலெக்ட்ரான்கள் என்ன செய்யும் என்று இன்று நமக்குத் தெரியும். நாம் கெட்டிக்காரர்கள். பிரச்னை என்னவென்றால் குவாண்டம் இயக்கவியல் உண்மையைப் பிரதிபலிக்கிறதா என்று கேட்டால் யாரிடமும் பதில் இல்லை.

அணுத் துகள்கள் நாம் பார்க்கும் வரை என்ன செய்கின்றன? அவைகளின் வேகம், அவைகளின் இருப்பு, இடம், எதுவும் தெரியாது என்பதே பதில். இந்தப் புள்ளியில் இருக்கலாம் அல்லது அந்தப் புள்ளியில் இருக்கலாம். அன்ட்ரோமேடா பிரபஞ்சத்தில் இருக்கலாம். (இயற்பியலில் இந்த நிலைக்கு superposition என்று பேர்.)

நாம் பார்த்த பிறகு நமக்குத் தோதான ஒரு புள்ளியில் வந்து அவை சுழன்று கொண்டிருக்கின்றன.

அனைத்துமே எலெக்ட்ரான்களால் ஆனதால் (நாம் உட்பட) பார்வை தான் பிரபஞ்சத்தை இயங்க வைக்கிறதா? நாம் பார்க்கிறோம் அல்லது பார்க்கவில்லை என்று பிரபஞ்சத்துக்கு எப்படி தெரியும்? இந்த இடத்தில் இயற்பியலாளர்களோ, மெய்யியலாளர்களோ பேசாமல் நழுவுவதில் குறியாய் இருப்பார்கள். கவனித்திருப்பீர்கள்.

இது வேறுலகம் தனி உலகம்

இயற்பியலில் இன்று பல்லுலக கோட்பாடு (Many-Worlds Theory) மிகவும் கவர்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் பவனி வருகிறது. மேலே சொன்ன சங்கடமான கேள்விகளை இது சாமர்த்தியமாகத் தவிர்த்து விடுகிறது.

Superposition அது இது என்று நாம் அலட்டிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் நாம் இருப்பதே ஒரே ஒரு உலகத்தில் தான் என்று நாம் நம்புவதால் வந்த வினை இது. ஒவ்வோர் கணமும் புதுப்புது உலகங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அப்படி ஒவ்வோர் உலகத்திலும் மாறுபட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

எடுத்துக் காட்டாய், இதோ இந்தக் கணத்தில் (இந்த உலகத்தில்) எனக்குப் பசிக்கிறது. இதே இந்தக் கணத்தில் தோன்றிய இன்னொரு உலகத்தில் நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்குகிறேன். இன்னோர் உலகத்தில் அம்மா அம்மா என்று ராப் பிச்சைக்காரனாய் அலைகிறேன். இன்னொரு உலகில் பஞ்சு மெத்தையில் பணக்காரனாய்ப் படுத்தபடி பசி வரவில்லையே. டாக்டரைப் பார்த்தால் தான் உண்டு என்று யோசிக்கிறேன்,

இந்தக் கோட்பாட்டின்படி, அணுத் துகள்கள் பார்க்க முன்பு எங்கே இருந்தன? என்ன வேகத்தில்? இப்படி கேட்டால் அவை வேறுலகங்களில் இருந்திருக்கலாம் இல்லையா என்று எதிர்க்கேள்வி வரும். அடுத்து, தன்னுணர்வு என்கிற பேச்சே அங்கே இருக்காது.

இதென்ன கூத்து என்று சிலர் யோசிக்கலாம். ஆனால் இன்றைய இயற்பியலில் மிகவும் பிரபலமான, அதுவும் பெருவாரி இயற்பியலாளர்களுக்குப் பிடித்தமான கொள்கை எது என்று கேட்டால் அது வளைய கோட்பாடு (String Theory) என்று பதில் வரும். அந்தக் கொள்கையில் பல்லுலக கோட்பாட்டுக்கு இடமுண்டு.

இருமை வாதப்படி, குவாண்டம் மனசு முடிவெடுக்கிறது. பார்வை பட்டதும், அதுவும் அடிப்படை இயற்பியல் விதிகளும் சேர்ந்தியங்கி புதிய நிலைப்பாட்டை எடுக்கின்றன.

இது இருமை வாத குழுவினர் சொல்லும் கருத்து. ஒரு மேலோட்டமான பதில். ஆனால் ஆதாரங்கள் இல்லை.

எல்லாம் மாயை தானா

மனம், உணர்வுகள், காதல் எல்லாமே கத்திரிக்காய். வெறும் மாயங்கள்.

இயற்பொருள் வாதம். பொருள்நிலைக் கோட்பாடு, பருப்பொருட் கோட்பாடு, பொருள் முதற் கோட்பாடு என்று பல பெயர்களில் சுட்டப்படும் இதை ஆங்கிலத்தில் Materialism என்பார்கள்.

பொருளியலில் இது அடிக்கடி அடிபடும் வார்த்தை. (மெய்யியல் ரீதியில் இதன் பொருள் வேறு. கவனிக்கவும்.) தன்னுணர்வு என்பதை முற்றிலும் மறுப்பவர்கள் இயற்பொருள் வாத குழுவினர்.

மின் வேதிப்பொருள் எதிர்வினைகளில் (electro-chemical reactions) நியூரான்கள் நம் மூளையில் உருவாகின்றன. அவைகளின் சிக்கலான எதிர்த்தாக்கங்கள் சில மாயைகளை ஏற்படுத்துகின்றன. அந்த மாயைகளை உண்மை என்று நம்புகிறோம். தன்னுணர்வே மூளையில் இருந்து தான் பிறக்கிறது.

நரம்பியல் துறையும் உயிரியலின் செல் கட்டமைப்பு துறையும் (Cellular Biology) சேர்ந்து வேகவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. விரைவில் மனம் என்றால் என்ன என்று தெரிந்துவிடும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளக்கூடாது? – சொல்வது இயற்பொருள் வாத குழுவினர்.

தன்னுணர்வுக்கு எப்போது ஆப்பு வைக்கலாம் என்று யோசிக்கும் இவர்கள் இயற்பியலும் வேதியியலும் அவசரப்படக் கூடாது. மேலே சொன்ன இரண்டு துறைகளும் தீர்மானத்துக்கு வந்த பிறகு அங்கங்கே இடைவெளிகள் இருக்குமே. அதை இந்த ஆட்கள் நிரப்பினால் போதும் என்கிறார்கள்.

இயற்பொருள் வாதத்தின்படி, நாமெல்லாம் நடமாடும் எந்திரங்களாக, கணனிகளாகக் கூட இருக்கலாம். எலெக்ட்ரான்கள், குவார்க்ஸ் போன்ற அடிப்படைப் பொருள்களால் ஆன கூட்டுத் தயாரிப்புகள் நாம். இயற்பியல் விதிகளின்படி இயங்கும் சிக்கலான எந்திரங்கள். இயற்கையின் படிநிலை வளர்ச்சியில் ஏற்பட்ட நடமாடும் ரோபோக்கள்?

இன்றைய பெருவாரி அறிவியலாளர்கள் இயற்பொருள் வாதத்தை நம்புகிறார்கள் எனும் செய்தியை முன் வைக்கிறார் பேராசிரியர்.

தன்னுணர்வைத் தர்க்க ரீதியாக, உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் அவர்கள் இருப்பதாக உணர்கிறார். இந்த இரண்டும் கெட்டான் நிலைக்கு ஒரு எடுகோள் (hypothesis) :

எடுகோள் A : அறிவியல் எதையுமே புறவய நிலையில் (objective) இருந்து பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறது.

வெளி உலக மனிதர் ஒருவர் பூமிக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு இயற்பியல், கணிதவியல் தெரிந்திருந்தால் நம் உலகை அவரால் புரிந்து கொள்ள முடியும். பக்க சார்பின்றி பார்க்க முடியும். ஏனென்றால் இயற்பியல், கணிதவியல் இரண்டும் முழு பிரபஞ்சத்துக்கும் பொதுவானவை.

எடுகோள் B : எந்த ஒரு உயிரினத்தின் வாழ்க்கையையும் அந்த உயிரினமாகப் பிறந்தாலன்றி புரிந்து கொள்ள முடியாது. அகநிலைப் பார்வை (subjective) உண்மையாய் இருக்க முடியாது.

வௌவாலுக்குக் கண் தெரியாது. இருந்தும் துல்லியமாய், எதிலும் மோதிக் கொள்ளாமல் பறக்க முடிகிறது. இரை தேடத் தெரிகிறது. மீண்டும் தன் இருப்பிடம் வரத் தெரிகிறது. தன் குட்டிகள், நண்பர்களை அடையாளம் காணத் தெரிகிறது. ஆகவே வௌவாலாக நாம் பிறந்தாலன்றி வௌவால்களின் உலகைப் புரிந்து கொள்ளவே முடியாது.

A யும் B யும் நேர் எதிராக முரண்படும்போது எதை சரி என்று சொல்வது?

தன்னுணர்வு பொய் தானோ? பேராசிரியர் அடுத்த கட்டம் நோக்கிப் போகிறார்.

மாஞ்சோலைக் குயில் தானோ மயில் தானோ

தோற்ற மயக்கவியல் (Illusionism) இன்றைய மெய்யியலில் முளை விட்டிருக்கும் ஓர் துறை. மாயை என்பது உயிர் வாழ அவசியமான ஒரு கருத்தாக்கம். அதே சமயம் அதைத் தவறாகப் பயன்படுத்தல் ஆபத்தை விளைவிக்கும் என்கிற கொள்கையும் அது முன் வைக்கிறது.

உயிர்களின் படிநிலை வளர்ச்சிக்குத் தோற்ற மயக்கம் உதவுகிறது. ஏனென்றால் உயிரினங்கள் சுற்றுப்புற சூழலோடு ஓத்தியங்க வேண்டிய நிலையில் சதா போராட வேண்டி இருப்பதால் (இது ஓர் சிக்கலான இடைத்தாக்கம் – complex interaction) தன்னுணர்வு என்கிற மாயையைத் தாமாகவே உருவாக்கிக் கொள்கின்றன.

இயற்பொருள் வாதத்தை விட இது பரவாயில்லை என்கிறார் பேராசிரியர். மயக்கவியல் குழுவினர் உண்மை என்று ஒன்று இருக்கிறது. அதே சமயம், தோற்ற மயக்கமும் உண்மை. அதற்கான ஆதாரங்கள் உண்டு என்கிறார்கள்.

உதாரணமாய், என் முன்னால் ஒரு மேசை இருக்கிறது. அதை ஓர் மின் நுண்ணோக்கி (electronic microscope) மூலம் இன்னும் ஆழமாக நோக்கினால் அணுக்கள், மூலக்கூறுகள் அதில் பிணைந்திருப்பது தெரியும். இருந்தும் எனக்குத் தெரிவது மேசை. இது ஒரு “அனுபவம்”. அது இப்படி வடிகட்டி மேசையாகக் காண்பிக்கிறது.

நேரடியாக, உண்மையை நம்மால் ஒரு போதும் காண முடியாது. உண்மை வடிகட்டப்பட்டு அனுபவம் மூலம் வந்தடைகிறது.

இருந்தும் பேராசிரியருக்கு இந்த விளக்கம் திருப்தி தரவில்லை. இது அனுபவம் பற்றிய உண்மையே தவிர உண்மை அல்ல என்கிறார் அவர்.

இனி அவரின் கருத்துக்கு (மூன்றாவது கொள்கை) வருகிறோம்.

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்

பேராசிரியர் துவக்கத்தில் இருமை வாத ஆதரவாளராய் இருந்திருக்கிறார். அதாவது 1972 வரை. Panpsychism கொள்கை பற்றி மெய்யியலாளர், தாமஸ் நாகேல் (Thomas Nagel) எழுதிய கட்டுரையை வாசித்த பிறகு என் மனதில் பெரும் தாக்கத்தை உணர்ந்தேன் என்கிறார்.

(Panpsychism என்பதை “உள்ளார்ந்த உணர்வு” என்று எனக்கு நானே சரியோ, தவறோ மொழி பெயர்த்திருக்கிறேன்.)

இந்தக் கொள்கையின்படி, தன்னுணர்வு என்பது பிரபஞ்சத்தின் அடிப்படைகளில் ஒன்று மட்டுமல்ல, பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்த ஒன்று.

மனிதர்களின் அல்லது விலங்குகளின் தன்னுணர்வுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் தன்னுணர்வுக்கும் தர வித்தியாசம் இருக்கிறது.

நம் தன்னுணர்வின் அளவு மற்றைய உயிரினங்களை விட உயர்வாய் இருப்பதற்குக் காரணம் பல மில்லியன் ஆண்டுகளாக நம் படிநிலை வளர்ச்சி மிக வேகமாகவும் மிகவும் சிக்கலாகவும் மாற்றமடைந்து வந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு சிறு துகளின் தன்னுணர்வுக்கும் நம்முடைய தன்னுணர்வுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவு வேறுபாடு இருக்கிறது. ஒரு எலெக்ட்ரானுக்கு, ஒரு குவார்ட்சுக்கு தன்னுணர்வு இருப்பின் அது நினைத்துப் பார்க்க முடியாத மிகமிகச் சிறு அளவில் இருக்க வேண்டும்.

உள்ளார்ந்த உணர்வு பொருள்கள் உள்ளேயே இயற்கையாய் அமைந்திருக்கிறது. அதற்காக ஒரு கல்லுக்கும் தன்னுணர்வு இருக்கிறது என்று பொருளல்ல. அதில் உணர்வுகள் மிகமிக சின்னவை மட்டுமல்ல எந்த ஒன்றிணைவும் இல்லாமல் சிதறுண்டு கிடக்கின்றன.

நம் மனித அனுபவங்கள் சிக்கலானவை. ஒப்பீட்டளவில், நம்மை விட மற்ற உயிரினங்களின் அனுபவ அளவுகோல் குறைந்தே இருக்கிறது. சில உணர்வுகள் சில உயிரினங்களில் கூடுதலாக இருக்க, வேறு சில உயிரினங்களில் குறைந்திருக்கலாம். சில சுவிச்சுகள் முழு அளவில் போடப்பட்டிருக்கின்றன. தேவையைப் பொறுத்து சில உயிரினங்களின் சுவிச்சுகள் அணைக்கப் பட்டிருக்கின்றன அல்லது ஓரளவே வேலை செய்கின்றன என்று அனுமானிக்கலாம்.

பேராசிரியர் இந்தக் கொள்கை நிரூபிக்கப்பட இன்னும் காலம் போகும். ஆனாலும் அதன் விளக்கம் மற்ற எந்தக் கொள்கையையும் விட அறிவியலுக்குப் பொருத்தமாகவும் எந்த ஒரு மனித பண்பாட்டிலும் சிக்கிக் கொள்ளாமல் தனித்து நின்று பிடிக்கக் கூடியதாகவும் மர்மங்கள், புதிர்களைக் களைந்து, வெளிப்படைத் தன்மையோடும் இருக்கிறது என்கிறார்.

இருமை வாதத்தில் தன்னுணர்வு எங்கோ வெளியில் இருந்து ஓடி வந்து பொருளோடு ஒட்டிக் கொள்கிறது. இயற்பொருள் வாதத்தின்படி, தன்னுணர்வு மூளைக்குள் எங்கேயோ ஒளிந்திருக்கிறது. இரண்டுக்குமே ஆதாரங்கள் இதுவரை இல்லை.

இயற்பியலும் வேதியியலும் இந்த உள்ளார்ந்த உணர்வை அலட்சியம் செய்கின்றன. தற்காலிகமாக அவ்வப்போது ஏற்படும் எதிர்வினைகளை மட்டும் (casual roles) கணக்கில் எடுத்து முடிவெடுக்கின்றன.

ஒரு மிகச் சிறு அடிப்படை உணர்விலிருந்து (micro-level) எப்படி சிக்கலான ஓர் பேருணர்வுக்கு (macro-level) மாறுகிறது என்பதை இந்த உள்ளார்ந்த உணர்வு விளக்கவில்லை என்று சில விமர்சகர்கள் சொல்கிறார்களே?

பேராசிரியர், குழந்தைகள் வைத்து விளையாடும் லெகோ (Lego) துண்டுகளை உதாரணம் காட்டுகிறார். கோபுரம் கட்டவில்லையா? பாலம் கட்டவில்லையா? கட்டியபின் என்ன தெரிகிறது?

படிநிலை மாற்றத்தில் கண் எப்படி உருவாகியிருக்கும் என்று டார்வின் கோட்பாட்டு அடிப்படையில் விளக்கியிருந்தார். அதில் கூட நிறைய விரிசல்கள், உரசல்கள் இருக்கவில்லையா? இன்று அந்த இடைவெளிகளை நாம் நிரப்பி விட்டோமா இல்லையா?

என் முன்னால் மடிக்கணனி இருக்கிறது. கோப்பையில் சூடு பறக்கும் காப்பி வாசனை மணக்கிறது. அடுத்த வீட்டில் குழந்தைகள் அடிக்கும் லூட்டி காதில் கேட்கிறது. இத்தனை உணர்வுகளும் சேர்ந்தது நான் எனும் தன்னுணர்வு. இப்படி பல்வேறு உணர்வுகள் மூளையின் பல்வேறு பகுதிகளிலும் உருவாகின்றன என்றால் மூளை எவ்வாறு ஒன்றிணைக்கிறது?

ஒவ்வோர் உணர்வையும் (“நிலைகள்” அல்லது அனுபவங்களை) ஒரே சமயத்தில் ஒன்று சேர்க்க மூளை பல குறிக்கோள்களை வைத்திருக்கிறது (unified cognitive goals) என்கிறார் பேராசிரியர். அதெப்படி? அதற்கு இன்னும் ஆய்வுகள் தேவை என்பதையும் ஒத்துக் கொள்கிறார்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்து உரித்து ஆய்வு செய்கிறோம். தோல். சுளை என்று ஒவ்வொன்றையும் பிரித்தெடுத்து தனித்தனியாக அவற்றின் தன்மைகளை அறிந்தோமானால் முழு ஆரஞ்சுப் பழத்தின் தன்மையையும் சொல்லிவிடமுடியுமா? முடியும் எனும் பிரிவுக்கு Reductionist approach (குறுக்கியல் பார்வை) என்று குறிப்பது வழக்கம்.

ஒரு நோயாளி டாக்டரிடம் போனால் அவர் உடலின் எந்தப் பகுதியை நோய் பாதித்திருக்கிறது என்று மட்டும் பார்ப்பதில்லை. அவரின் பழக்க வழக்கங்கள் என்ன, சுற்றுச் சூழல் எப்படி, தாய் தந்தையருக்கு இதே பிரச்னைகள் இருந்திருக்கின்றனவா என்று பல கோணங்களில் விசாரிப்பார். அப்போது தான் சரியான சிகிச்சை அளிக்க முடியும் . இந்த வகையான பார்வைக்கு Holistic approach (முழுமை நோக்கு) என்று பேர்.

பேராசிரியர் பின்னதை சேர்ந்தவர். நாம் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதை விட ஓர் முழுமையான பார்வையுடன் அணுகுவது தான் சரியானது என்கிற கொள்கைப் பிடிப்புள்ளவர்.

தொட்டால் பூ மலரும்

ஹைட்ரஜன் வாயு சில தனிப்பட்ட குணங்கள் கொண்டது. ஆக்சிஜன் வாயு வேறு குணங்கள் கொண்டது. இரண்டும் சேர்ந்தால் உருவாகும் தண்ணீர் முற்றிலும் வித்தியாசமான குணம் கொண்டது. இது போல வெவ்வேறு பொருள்கள் ஒன்று சேரும்போது முற்றிலும் புதிய ஒரு பொருள் உருவாவதில் எந்தப் புதுமையும் இல்லை.

இப்படி புதுப் பொருள்களில் வெளிப்படும் புதுப் பண்புகளை முகிழ் பண்புகள் (emergent properties) எனலாமா?

அப்படி ஒரு முகிழ் பண்பு மூலம் முன்னர் குறிப்பிட்ட ஒருங்கிணைந்த தகவல் (Integrated Information Theory) கோட்பாட்டின் குறைபாட்டை சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர்.

இந்தக் கோட்பாடு, எல்லா அடிப்படைப் பொருள்களிலும் தன்னுணர்வு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை (இருமை வாதம்). எங்கே தகவல்கள் ஒருங்கிணைப்பு மிகமிகச் செறிந்த அளவில் இருக்கிறதோ, அங்கே தன்னுணர்வு ஏற்பட சாத்தியக்கூறுகள் உண்டு என்று சொல்கிறது.

சாதாரண இரண்டு அடிப்படைப்பொருள்கள் ஒன்று சேர்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அந்த ஒருங்கிணைப்பில் பரிமாறப்படும் தகவல்களை இந்தப் பிரிவினர் நிச்சயம் தவற விடப் போகிறார்கள்- முகிழ்க்கும் தகவல் முக்கியமாய் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன.

ஒரு சமூகம் அதன் தனிப்பட்ட மனிதர்களை விட கூடுதலான தகவல்களை வைத்திருக்கும் என்பது தெரிந்ததே. இன்று இணையம் மனிதர்களை விட எல்லையே இல்லாத அத்துணை தகவல்களை வைத்திருக்கிறது. அப்படி என்றால் இன்றைய மனிதர்கள் கடந்த காலங்களை விடப் பெரும் புத்திசாலிகள், விற்பன்னர்கள் என்று சொல்ல முடியுமா?

இந்தக் கோட்பாட்டின்படி, தகவல்கள் கட்டுப்பாடின்றி ஒன்றிணைக்கப்பட, அங்கே தன்னுணர்வும் படுவேகமாக உயர்கிறது. அப்போது இணையம் அசுர பலத்தை எட்டிவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மனிதர்கள் அல்ல. ஒவ்வொரு மனிதனும் வெறுமனே அந்த ராட்சத சக்கரத்துப் பல் போல ஆகிவிட முடியும். இது ஓர் முரண்.

இயற்பியலாளர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார் பேராசிரியர்.

சார்புநிலைக் கோட்பாட்டையும் குவாண்டம் கோட்பாட்டையும் இணைக்கும் அனைத்துக் கோட்பாடு (Theory of Everything) தான் நம் இலக்கு என்று இயற்பியலாளர்கள் சொல்கிறார்கள். அப்படி ஒருவேளை அது எதார்த்தத்தில் நடந்துவிட்டாலும் கூட அது முழுமை பெற்றதாக இருக்காது என்கிறார் அவர்.

காரணம்: “பார்வை” குவாண்டம் உலகில் முக்கிய இடம் வகிக்கிறது. இது அகவய நிலை – subjective. இந்தப் பிரச்னையை இயற்பியல் எப்படித் தீர்க்கப் போகிறது? ஆகவே, இயற்பியல் அனைத்துக் கோட்பாட்டைக் கைவிட்டு உண்மைக் கோட்பாடு (Theory of Reality) என்பதை இலக்காக வைத்து ஆய்வுகளைத் தொடர வேண்டும் எனும் கருத்தை முன் வைக்கிறார்.

மெய்யியலின் பல பிரிவுகள், தர்க்க நியாயங்கள், விவாதங்கள்..

அறிவியல் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் , சந்தேகங்கள், தயக்கங்கள்..

காலநிலை மாற்றத்துக்கு மனிதர்கள் முக்கிய காரணம்..

மனிதர்கள் இயற்கையை அழிக்கிறோமே என்கிற சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள், அதற்கு சில மெய்யியல் பிரிவுகள் கூடத் துணை போகின்றன..

காடுகள் முழுக்க முழுக்க நிறைந்திருக்கும் தன்னுணர்வுகள்..

மரங்கள், செடிகளோடு நம் பிணைப்பு அற்றுப் போய்விட்டது. பசுமையைக் காக்கத் தவறிவிட்டோம்..

இப்படி பல பரிமாணங்களைத் தொட்டபடி வந்திருக்கிறது நூல்.

ஆச்சரியம் தரும் செய்தி: அவர் தினமும் தியானம் செய்கிறாராம். அப்போ ஏதாவது சக்திகள், சித்திகள் வாய்த்தனவா? சே! அப்படி எதுவும் தெரியவில்லையே. ஞானோதயம் வந்துவிட்டால் நிச்சயம் என் ட்விட்டரில் போடுவேன் என்கிறார்.

வழக்கம் போல், நூலில் அங்குமிங்கும் தேர்ந்தெடுத்த செய்திகளை இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

மெய்யியல் / இயற்பியல் மாணவர்கள் மற்றும் ஆர்வம் கொண்டோரின் சிந்தனையைக் கிளறும் நூல்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.