எப்ப பாத்தாலும் தண்ணியிலேயே இருந்தா உருப்பட்ட மாதிரி தான். அநியாயமா செத்துப் போயிருவீங்க. நான் இருக்கேன்ல. வாங்க மச்சி என்று தாவரங்களைப் பார்த்து பூஞ்சை கூப்பிட்டிருக்காவிட்டால்…விட்டால்… அப்ரமென்ன.. பூமியின் கதையே மாறிப் போயிருக்கும்.
எல்லா உயிர்களும் கடலில் இருந்து தான் நிலத்துக்கு வந்தன என்பது தெரிந்ததே. இருந்தும் கிட்டத்தட்ட 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தாவர இனம் நிலத்துக்குக் குடி பெயர உதவிய அப்பேர்ப்பட்ட பூஞ்சை இனத்தை எப்படி, எந்த உயிரினத்துள் வகைப்படுத்துவது? உயிரியலாளர்கள் இன்று வரை குழப்பத்தில் இருக்கிறார்கள்.
பூஞ்சை, பூசணம், பூஞ்சண வலை, பங்கசு… என்று தமிழில் பல பேர்களில் இருக்கும் Fungi இனம் பற்றி உயிரியலாளர், மெர்லின் ஷெல்டிரேக் (Merlin Sheldrake) எழுதிய ஏட்டின் சில செய்திகள் இங்கே வருகின்றன. போன ஆண்டின் (2020) விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது Entangled Life ஏடு!
மெர்லின் பார்க்க இளைஞர். அவர் சின்னப் பையனாக இருக்கும்போதே பூஞ்சை மீது அவருக்கு ஏற்பட்ட கன்னுகுட்டி காதல் இன்று உயிரியல் ஆய்வாளர், எழுத்தாளர் .. என்று வளர்த்து விட்டிருக்கிறது. இவரின் ஏட்டை வாசித்து முடித்த இன்னோர் ஆய்வாளர் சுனாமி அடித்தது போலிருந்தது என்று எழுதியிருந்தார். அப்போ சும்மா இருக்க முடியுமா?
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா
உண்மையில் பூஞ்சை தாவரங்களை சும்மா கூட்டி வரவில்லை. தாவரங்களும் தானாக வரவில்லை. தாவரங்கள் உணவு தயாரித்துக்கொள்ள சூரிய ஒளியை எப்படி உபயோகிக்கலாம் (photosynthesis) என்று ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தன. அதே சமயம், ஊட்ட சத்துக்கு பொஸ்போரஸ், நைட்ரஜன் போன்ற மற்ற மூலப் பொருள்களும் தேவை. ஆனால் இவற்றை நிலத்தில் இருந்து பிரித்தெடுக்க தாவரங்களுக்குத் தெரியவில்லை.
பூஞ்சை இனத்துக்கோ நிலத்தில் இருந்து பிரித்தெடுக்கும் கலை தெரியும். சூரிய ஒளி பற்றி எதுவும் தெரியாது. ஆகவே ஒப்பந்தத்தில் இந்த இரண்டு இனங்களும் கையெழுத்து போட்டதில் வியப்பு எதுவும் இல்லை. இது உலகின் மகா மெகா ஒப்பந்தம். இன்று வரை தொடரும் ஒப்பந்தம்.
விளைவு : நிலத்துக்கு மேலே தாவர ஆட்சி கொடி கட்டிப் பறக்க, நிலத்தின் கீழே பூஞ்சை சாம்ராஜ்யம் அமைந்தது.
பூமி எங்கும் பூஞ்சை நிறைந்திருந்தாலும் பெரிதாகத் தென்படுவதில்லை. வயசு விஷயத்தில் ஆண்டவன் தாராள மனசோடு நடந்திருக்கிறார். நாமெல்லாம் 60, 70 ஆகிவிட்டாலே அங்கே வலி, இங்கே வலி என்று ஆயிரம் வலிகளோடு மல்லாடுகிறோம். எந்த வலியும் இல்லாமல் சுமார் 2000 – 8000 ஆண்டுகள் வரை வாழக்கூடிய பூஞ்சை இனங்கள் உண்டு.
இனங்கள்? ஆம். கிட்டத்தட்ட 2.2 – 3.8 மில்லியன் வகை பூஞ்சை இனங்கள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்கள்.
பூஞ்சை நமக்குள் இருக்கிறது. விலங்குகள், தாவரங்கள் எங்கும் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது. அது மட்டுமா? பாறைகள், கற்களை உடைத்து மண்ணை உருவாக்குவது அது. உயிர்களை வாழ வைக்கிறது அல்லது அழிக்கிறது. விண்வெளியில் தாக்குப் பிடிக்கிறது.
நம் உணவு, மருந்து தயாரிப்புகளுக்கு அது தேவை. பூமியின் மேற்பரப்பில் காலநிலை மாற்றங்கள், உயிர்களின் நடத்தை, போக்குகளை மாற்றக் கூடிய சக்தி அதற்குண்டு. மனிதர்களுக்கு ஏற்படும் “தரிசனங்கள்” மற்றும் “மஜா” விஷயங்களையும் அது உருவாக்குகிறது.
இன்றைய யுகத்தில், நெகிழி (பிளாஸ்டிக்) மற்றும் வேதிப்பொருள்கள், கதிரியக்க கழிவுகளை என்ன செய்வது, எங்கே கொட்டுவது, மீள்சுழற்சி செய்யமுடியாதா என்று கலங்கி நிற்கிறோம்.
பூஞ்சைகளுக்கோ தேடல், ஆராய்வுத் திறன் அதிகம். எதையும் சாப்பிட்டு வாழும் பக்குவம் தெரிந்தவை. நெகிழியோ எதுவோ அதெல்லாம் தின்று செரித்துக் கொள்ளும். ஆனால் நமக்குத் தான் ராஜா கண்ணு, அம்புலிமாமா பாரு என்று தாஜா பண்ணி ஊட்டிவிடும் வித்தை தெரியவில்லை. ஆய்வகங்களில் அறிவியலாளர்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகின் பிரம்மாண்ட உயிரினம் பூஞ்சை. சில பூஞ்சைகள் எத்தனையோ சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்டவை. எடையோ பல நூறு டன்கள். திமிங்கிலங்கள் கூட கிட்டவே வரமுடியாது. அப்டி பெரிசு.
உயிரினம்? இந்த சொல்லை மிகக் கவனமாக பூஞ்சை விஷயத்தில் உபயோகிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இருந்தாலும் எல்லா உயிர்களுக்கும் அடிப்படையான மூன்று இனங்களில் இதுவும் ஒன்று. மற்றவை: பாக்டீரியா, அல்கெ (பாசி).
தவிர, தாவரங்களுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள உறவை மனிதர்களால் புரிந்து கொள்வது கடினம் என்கிறார் மெர்லின். பொதுவாய், நமக்கு எதுவுமே ரெண்டு,ரெண்டு தான். ஆண்-பெண், ஒளி- இருள், நல்லது- கெட்டது… இப்படி இந்த கட்டமைப்பைத் தாண்டி சிந்திக்க முடியுமா?
புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
பூஞ்சை என்பது ஹைஃபி (hyphae) என்று சொல்லப்படும் செல்களின் தொகுதி. இந்த செல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, பரந்து.. ஆனால் தொகுதி என்று சொல்வதை விட, இவைகளின் இயங்கும் தன்மை தான் உயிரினம் போல் நமக்குத் தோற்றம் தருகிறது. உயிரினம் என்றால் என்ன என்று நாம் ஒரு வரைவிலக்கணம் வைத்திருக்கிறோம். நம் மனசின் எல்லைகளைத் தாண்டி, நம் சிந்தனையைத் தட்டிவிட்டால்..
எது எப்படியோ, உயிரினத்துக்கும் உயிரற்ற பொருள்களுக்கும் நடுவில் எங்காவது ஓரு புள்ளியில் பூஞ்சையை நிறுத்திக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதாவது, பூஞ்சை வாழ்கிறது என்பதை விட, நிகழ்கிறது என்கிற சொல் பொருத்தம் என்கிறார் மெர்லின். பூஞ்சை ஓர் நிகழ்வுப் போக்கு.
உடல் அமைப்பு இல்லாத, அதே சமயம் உயிர்த்தன்மை கொண்டது பூஞ்சை.
பூஞ்சையை ஆய்வு செய்கிறேன், ஆய்வு செய்கிறேன் என்று பல உயிரியலாளர்கள் உண்மையில் கிராக்குகளாகவே மாறிவிட்டார்கள் என்று தெரிகிறது. மெர்லினும் விதிவிலக்கல்ல. ஒரு ஆய்வாளர் மெர்லினோடு பேசும்போது, நான் பூஞ்சை போல சிந்திக்கிறேன், பூஞ்சை என்னோடு பேசுகிறது என்கிறார். (ஏட்டை வாசியுங்கள். நகைச்சுவை அம்சங்கள் நிறையவே .. )
மெர்லினும் அவர் பங்குக்கு விக்ரமாதித்த முயற்சிகள் செய்து பார்க்கிறார். ஒருவேளை, மது, போதைப்பொருள்கள் உதவுமோ? (இரண்டிலும் பூஞ்சை உண்டு.) இந்த விஷயங்களில் பல்கலைக்கழகங்கள் நடத்தும் சோதனைகளில் கலந்து கொள்கிறார்.
பூஞ்சை- தாவர உறவை இன்னும் ஆழமாகப் பார்த்தால், ரெண்டு பங்காளிகளும் எப்போதுமே மனமொத்து வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. நிலத்துக்கு அடியில் தாவரங்களின் வேர்களோடு ஒட்டி ஒரு பெரும் வலைப் பின்னலாக இருக்கும் பூஞ்சை தாவரங்களுக்கிடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது.
நலிவுற்ற தாவரங்களுக்கு, இறப்பின் எல்லையில் வாழும் தாவரங்களுக்கு, குழந்தைத் தாவரங்களுக்கு அவசியமான ஊட்ட சக்தியை பூஞ்சை மூலம் மற்ற ஆரோக்கிய சகாக்கள் அனுப்புகிறார்கள்.
இதற்காக பூஞ்சை ஒரு குறிப்பிட்ட ஊட்ட சக்தியைக் கட்டணமாக அறவிடுகிறது. அதாவது கமிஷன் அடிக்கிறது. சில சமயங்களில் அது கந்து வட்டியாகவும் மாறுகிறது. தாவரங்களால் அசைய முடியாதே. கடைந்தெடுத்த கார்ப்பரேட் முதலாளியாய் நடந்து கொள்கிறது பூஞ்சை.
சில சமயங்களில் எதுவும் எதிர்பார்க்காமலே சில தாவரங்களுக்கு கொடை வள்ளலாக அள்ளிக் கொடுக்கிறது பூஞ்சை. ஏன் என்று தெரியவில்லை. வட அமெரிக்காவில் மற்றும் பிரேசில் நாட்டில் வளரும் வோய்ரியா தாவரங்கள் (Voyria) பெருமரங்களின் அடியில் வாழ்வதால் சூரிய ஒளி கிடைப்பதில்லை.
அதன் எதிரொலியாய் உணவு தயாரிக்கும் முறையை வோய்ரியா எப்போதோ மறந்து போய்விட்டது. இலைகளில் பச்சைத் தன்மை இல்லை. பூஞ்சை மூலம் கிடைக்கும் இலவச ஊட்ட சக்தியை நம்பி வாழ்கிறது. இங்கே அசல் கம்யூனிஸ்ட் காம்ரேட் போல நடந்து கொள்கிறது பூஞ்சை.
பூஞ்சை சோஷலிசவாதியா அல்லது முதலாளித்துவவாதியா என்று பிரித்து மேய்வது கஷ்டம். நாம் நமது மனித குணாதிசயங்களை மற்ற உயிர்களில் திணித்து அதன் மூலம் புரிந்து கொள்ளப் பார்க்கிறோம்.
இயற்கைச்சூழல் (ecosystem) என்பது இன்று தினமும் எங்கும் அடிபடும் சொல். எந்த ஓர் உயிரினத்தையும் இயற்கையில் இருந்து நாம் தனியாகப் பிரித்தெடுத்து அதற்கென்று ஒரு பேர் வைத்து அதன் தன்மைகள் இன்னின்ன என்று விளக்கப் போனால் அதை விட கேனத்தனம் இருக்கவே முடியாது.
நாம், மண், காற்று, பூமி, உயிரினங்கள் அனைத்துமே ஒன்றோடு ஒன்று கொண்டிருக்கும் தொடர்புகள் (relationship). தொடர்புகள் மட்டுமே இருக்கின்றன.
பூஞ்சையோ, தாவரங்களோ பாக்டீரியாவோ எப்படி ஆளுக்காள் பேசிக் கொள்ளும்? அநேகமாக ஒவ்வொன்றும் வேதிப் பொருள்களை உருவாக்குகின்றன. ஓர் வேதிச் சேர்மத்துக்கு (chemical compound ) ஓரு பொருள். இன்னொரு சேர்மத்துக்கு இன்னொரு பொருள். இப்படி சைகைகள் அனுப்பிக் கொள்கின்றன. மின் தூண்டல்கள் (electrical impulses) மூலமும் பேசிக்கொள்கின்றன.
பூஞ்சை மின் தூண்டல்கள் மூலம் தொடர்பு கொள்கிறதா?
மேலே சொன்னது போல் உயிரினங்கள் இணைந்திருக்கும்போது அல்லது பிணைந்திருக்கும்போது பேசிக்கொள்ள என்று எதற்கு ஒரு தனி சாதனம்/ஊடகம்? மெர்லின் புதிய கோணத்தில் பார்க்கிறார்.
தலை இல்லை. உடல் அமைப்பு இல்லை. விலங்கினத்துக்கு இருப்பது போல நியூரான்கள் அமைப்பு (மூளை நரம்பு மண்டலம்) இல்லை. பூஞ்சை எப்படி நகர்கிறது? அது எப்படி சிந்திக்கிறது?
இரு புகழ் பெற்ற அறிவியலார்களின் கருத்து : மூளை எனும் உறுப்பு தோன்ற முன்னமே உயிர்கள் சுற்றுச்சூழலை உணர்ந்து கொள்ளப் பழகிவிட்டன.
தவிர, அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு மூளை எதற்கு என்று கேள்வி எழுப்புகிறார் இன்னோர் ஆய்வாளர். கரையான் புற்றுகளைப் பாருங்கள். புற்றின் அமைப்பு சிக்கல் நிறைந்ததாகவும் அதே சமயம் சிறப்பாகவும் இருப்பதைக் கவனித்தீர்களா?
தட்டைப்புழுவின் (flatworm) தலையை வெட்டிவிட்டால் மீண்டும் வளர்கிறது. வழக்கம் போல் அதன் வாழ்க்கையைத் தொடர்கிறது. கணவாய் மீன்களிலும் இது போல் ..
நானே வருவேன் இங்கும் அங்கும்
ஒரே சமயத்தில் இரண்டு கதவுகள் ஊடாக நம்மால் போகமுடியுமா? இரண்டென்ன, எத்தனை வழிகளாலும் முன்னால், பின்னால், பக்கவாட்டில், மேலே, கீழே எங்கும் அசையக்கூடியது பூஞ்சை.
உக்கிப் போன ஒரு மரத்துண்டை அதன் முன்னால் வைத்தால் ஒரு ஹைஃபி அதைத் தொடுகிறது. ஒரு வட்டம் போல் மரத்துண்டை சுற்றி வளைக்கிறது. மரத்துண்டை வேறு இடத்தில் தூக்கி வைத்தால் அதை நோக்கி நகர்கிறது. ஆகவே சிந்திக்கிறது?
இன்னொரு வகை பூஞ்சையை (Panellus stiptucus) ஒரு தட்டில் வைத்து சில நாட்கள் கழித்துப் பார்த்தால் ஒளிர ஆரம்பிக்கிறது. இன்னொன்றை அருகில் வைத்தால் ஒளிக்கற்றை முதலாவதில் இருந்து இரண்டாவதற்குத் தாவுகிறது. இரண்டுமே ஒளிர ஆரம்பிக்கின்றன. பேசிக் கொள்கின்றன?
பூஞ்சையின் நிகழ்வுக்கு (தொகுதிக்கு) mycelium என்று பேர். விலங்குகள், தாவரங்கள் உணவை உட்கொண்டு செரித்துக் கொள்கின்றன. மைசீலியம் உணவுக்குள் தானே புகுந்து கொள்கிறது. செரித்துக் கொள்கிறது!
பூஞ்சை நோய்களையும் உருவாக்கும். ஆதி எகிப்தியர்களுக்கு பூஞ்சை மீது பயம், பக்தி ரெண்டும் அதிகம். நோய், பட்டினி வராமல் காக்க ரோமர்கள் பூஞ்சை தேவதையை வேண்டியிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய பழங்குடிகள் காயங்களுக்கு பூஞ்சை மருந்து உபயோகிக்கிறார்கள். பெனிசிலின் நோய்க் கிருமிகளில் இருந்து எத்தனையோ மில்லியன் மக்களைக் காப்பாற்றி இருக்கிறது. பூஞ்சை இல்லாமல் பெனிசிலின் இல்லை.
தவிர, மாவு புளித்திருக்காது. இட்லி, தோசை, வடை, ரொட்டி, பிட்ஸா, கேக் இன்னும் எத்தனையோ உணவுப் பண்டங்கள்.. எதுவுமே இருந்திருக்காது. மதுவில் தேனில், காளான்களில்..
நான் கடவுள்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வேதனை இருக்கும். நுண் உயிரினங்கள் தப்பிப் பிழைத்து வாழ எத்தனையோ வழிகளைக் கையாள்கின்றன. எடுத்துக்காட்டாய், பாக்டீரியாக்கள் அவற்றின் மரபணுக்களை மற்ற நுண் உயிரிகளுடன் பகிர்ந்து கொண்டதில் யூக்கரியோட்டிக் செல்கள் (Eukaryotic cells) உருவாகின.
நாம், விலங்குகள், தாவரங்கள் அனைவருமே யூக்கரியோட்டிக் செல்கள் கொண்ட உயிர்கள்.
ஆனால் இந்த யூக்கரியோட்டிக் செல்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வதாக இப்போது தெரிய வந்திருக்கிறது. (மெர்லின் விலாவாரியாக விளக்குகிறார்.) யூக்கரியோட்டிக் செல்கள் கொண்ட லீக்கென் பூஞ்சைக்கு (lichens) தாவரங்களோடும் உறவுண்டு. தனித்தும் வாழ்கிறது.
அதற்குள்ளே இருக்கும் பாக்டீரியாக்கள் பல தொழில்கள் செய்கின்றன. எதிராளி வைரஸ்களை உள் வரவிடாமல் தடுக்கின்றன. உணவை செரித்துக் கொள்கின்றன. அதுவே ஒரு மினி உலகமாக (கிட்டத்தட்ட நம் உடல் போல்) செயல்படுகிறது. அது வேறு உயிரிகளோடும் (தன் வசதிக்காக) கூட்டுறவு வைத்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. நினைவிருக்கட்டும் : லீக்கென் ஒரு அமைப்பு அல்லது நிகழ்வு.
நாம் எல்லாருமே லீக்கென் பூஞ்சைகள்?
சீலோசைபின் (psilocybin) என்கிற வேதிப்பொருள் சில பூஞ்சைகளில் இருக்கிறது. போதை மருந்து எல்லெஸ்டி (LSD) அடித்தது போலிருக்கும். கடவுளை நேரில் காண லேசான வழி இது. சைபீரியாவில் பிரபலமாக இருக்கும் ஷாமான்கள் (மந்திரவாதிகள்) அடிக்கடி குறிப்பிட்ட பூஞ்சை (ophiocordyceps) சாப்பிட்டு, சாமியோடு பேசி மக்கள் குறைகளைத் தீர்ப்பது வழக்கம் என்கிறார் மெர்லின்.
சொல்லப்பட்ட பூஞ்சையை சாப்பிட்டால் நாள்கணக்கில் சிரிக்கலாம். பாடலாம். நடனம் ஆடலாம். களைப்பே இருக்காது.
சீலோசைபின் வேதிப் பொருளுக்கும் மனிதர்களின் இறை நம்பிக்கை, சமயங்கள், ஆன்மிகம், வர்த்தகம், கலைகள் மற்றும் சமூகத் தொடர்புகளுக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன என்று ஆணித்தரமாக சொல்கிறார் மெர்லின்.
சீலோசைபின் இன்று மருத்துவத்திலும் உதவுகிறது. மன நோய்களைத் தீர்க்க மட்டுமல்ல, போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களைக் குணப்படுத்தவும் உபயோகமாய் இருக்கிறது.
தாவரங்கள் கூட ஒரு வகை பூஞ்சைகள். தாவர வேர்களில் பூஞ்சை ஒட்டியிருக்கவில்லை. வேர்களே பூஞ்சை. பூஞ்சைகளும் தாவரங்களும் 10-15 புலனறிவுகள் கொண்டவை. மனித மூளைக்கும் கணனி மூளைக்கும் இடைப்பட்ட ஓர் அசாத்திய மதிநுட்பம் கொண்டவை என்று உயிரியலாளர்கள் நம்புவது மட்டுமல்ல ஆய்வுகளும் தொடர்கின்றன.
வெளியில் விரிவடையும் படிநிலை வளர்ச்சி மட்டுமல்ல (evolution) உள்நோக்கி விரியும் படிநிலை வளர்ச்சியையும் (involution) நாம் யோசிக்கவேண்டும் என்கிறார் மெர்லின்.
நான் நல்லா இருக்கேன் என்று யாரும் சொன்னால் அவர் உடம்பின் நுண்ணுயிர்கள் கடுமையாக உழைத்து அவரை நிம்மதியாக இருக்க வைத்திருக்கின்றன என்று பொருள். இந்தவாட்டி நல்ல விளைச்சல் என்று ஒரு விவசாயி சொன்னால் அவர் நிலத்தில் பூஞ்சை நலமாக விளைந்திருக்கிறது என்று புரிந்து கொள்தல் நல்லது. (விவசாயமே பூஞ்சை வளர்ப்பு.)
செர்னோபில் அணு உலை விபத்தின் பின் அந்த நிலத்தில் கால் பதித்த முதல் உயிர் பூஞ்சை.
மெர்லின் இன்னும் அசத்துகிறார். பூஞ்சை பாடம் எடுப்பது மட்டுமல்ல, வேதி இயல் நோக்கில், தொழில் துறை நோக்கில் … என்று விரிந்த ஓர் தளத்தில் நின்று பேசுகிறார். ஆய்வுக்காக, அவர் செய்த தில்லுமுல்லுகள் பற்றியும் (மற்ற ஆய்வாளர்கள் உட்பட) விவரிக்கிறார். பூஞ்சை அறிவியலுக்காக உலகம் சுற்றும் வாலிபன் அவர்.
அவர் ஒரு தடவை இயற்பியல் மேதை நியூட்டன் வாழ்ந்த வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தின் அடியில் போய்…
மெர்லின் அவரே எழுதினதை வாசிக்க விடாம எதுக்கு இன்னும் வளவள? மன்னிச்சுக்கங்க.